ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி ஆசிரியரின் கண்மூடித்தனமான பிரம்படி தாக்குதலுக்கு ஐந்தாம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள ஆல்வார் மாவட்டம், கிருஷன்கர் பாஸ் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் படித்து வந்த ராகுல்(11) என்ற சிறுவனை அப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் விரேந்திரா என்பவர் கடந்த 15-ம் தேதி பிரம்பால் முரட்டுத்தனமாக அடித்ததாக கூறப்படுகிறது.
பலத்த காயம் அடைந்த ராகுல், ஓரிரு நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி பிரம்படி காயங்களுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினான். எனினும், உள்காயங்களால் ஏற்பட்ட பாதிப்பால் நேற்று முன்தினம் இரவு அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என ஆசிரியர் பெருமக்களை கூறுவதுண்டு. ஆனால், மாணவன் ராகுல் விவகாரத்தில் ஆசிரியரே அவனுக்கு எமனாக மாறிவிட்ட கொடூரத்தை எண்ணி அவனது பெற்றோரும், உறவினர்களும் ஆவேசத்தால் கொந்தளிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக ராகுலின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள கிருஷ்னகர் பாஸ் பகுதி போலீசார், ஆசிரியர் விரேந்திராவிடம் விசாரித்து வருகின்றனர். இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை.

0 comments:
கருத்துரையிடுக