மாணவர்களை வேலை வாங்கக் கூடாது என்ற பள்ளிக்கல்வித் துறை இயக்குநரின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, ஜோலார்பேட்டை அருகே மாணவர்களை வேலையில் ஈடுபடுத்தியுள்ள சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு இருபாலர் பள்ளி நுழைவு வாயிலில் எழுதப்பட்ட ‘இருபாலர்’ எழுத்துகளை அழிக்க அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களை 30 அடி உயரத்தில் ஏற்றி, வேலை வாங்கிய சம்பவம் கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து திருப்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வரலட்சுமியை சஸ்பெண்ட் செய்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டார்.
இதையடுத்து தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், கல்வி கற்க வரும் மாணவர்களை வேலை வாங்கக்கூடாது. மீறினால் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட் டிருந்தார்.
இந்த சுற்றறிக்கையை திருப்பத் தூர் கல்வி மாவட்ட அலுவலர் பிரியதர்ஷினி அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக் கும் அனுப்பி உத்தரவை பின்பற்றும்படி அறிவுறுத்தினார்.
இந்நிலையில், ஜோலார்பேட்டை ஒன்றியம், பாச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தை மாணவர்களை கொண்டு தூய்மைப்படுத்தும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. பள்ளி வேலை நேரத்தில் மாணவர்கள் கையில் கடப்பாறை, மண்வெட்டி, துடைப்பம், குப்பை கூடைகளை வழங்கி, பள்ளி வளாகத்தையொட்டி உள்ள செடி கொடிகள் மற்றும் குப்பையை அகற்ற பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்களின் உத்தரவை ஏற்ற மாணவர்கள் பள்ளி வேலை நேரத்தில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கல்வித் துறை இயக்குநரின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, படிக்க வரும் மாணவர்களை இதுபோன்ற வேலை வாங்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கூறினர்.
இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, ‘‘இருப்பிடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள மாணவர்களுக்கு இது போன்ற வேலைகள் முன்பு கற்றக்கொடுக்கப்பட்டன. இருப்பினும் மாணவர்களை வேலை வாங்கக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை இயக்குநரின் உத்தரவு அமலில் உள்ளதால், அசோக்நகர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களிடம் இதுபற்றி விளக்கம் கேட்கப்படும். தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.


0 comments:
கருத்துரையிடுக