திருப்பூர்:பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி குறித்த அறிவிப்பு மற்றும் தலைப்பை, முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்பது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில், ஏதேனும் ஒரு தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. கடந்த முறை, "இயற்கை காப்போம்; வாழ்வை செழிப்பாக்குவோம்,' என்ற தலைப்பு வழங்கப்பட்டது. பள்ளி அளவில் வெற்றி பெறும் படைப்பை உருவாக்கும் மாணவர்கள், வட்டாரம், மண்டல போட்டிகளில் பங்கேற்கின்றனர். அதில் வெற்றி பெறுவோர், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்கின்றனர்.கண்காட்சிகளில், தனியார் பள்ளிகளின் ஆதிக்கமே காணப்படுகிறது.
வட்டார மற்றும் மாவட்ட அளவிலேயே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர், பின்தங்கி விடுகின்றனர். மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே, அரசு பள்ளிகள் பங்கேற்கின்றன. அறிவியல் கண்காட்சி குறித்த அறிவிப்பு, தலைப்புகளை முன்கூட்டியே தெரிவிக்காததே இதற்கு காரணம் என, ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. போதிய அவகாசமின்றி, அவசரகதியில் கண்காட்சிக்கு தயாராக வேண்டியுள்ளதாக, மாணவ, மாணவியர் புலம்புகின்றனர்.மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "கடந்த முறை, அறிவியல் கண்காட்சி குறித்து, முன்தினம் தகவல் வந்தது. சில மணி நேரத்தில் அறிவிப்பு கொடுத்து, மாணவர்களை தயார்படுத்த வேண்டியநிர்ப்பந்தம் ஏற்படுகிறது. குறைந்தபட்சம், ஒரு வார அவகாசம் அளித்தால், மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில், அற்புதமான படைப்புகளை இடம் பெறச் செய்யலாம். இதை, கல்வித்துறை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்,' என்றார்.

0 comments:
கருத்துரையிடுக