செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

தனியார்மயமாகும் தொடக்கப்பள்ளிகள்-நன்றி காலச்சுவடு



அரசியல் - பொருளாதார மாற்றம் என்பது, ஒரு சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் தனக்கு அனுகூலமான அரசியல் மற்றும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தித் தன்வயப்படுத்தும். அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவச் சமூகம், 15ஆம் நூற்றாண்டு முதல் பல வடிவங்களில் உலாவரும் முதலாளித்துவச் சமூகம்வரை அனைத்திலும் இதற்கான சான்றுகளைப் பார்க்கலாம். உற்பத்தி முறை மற்றும் அதன் இயல்புகள், சமூகத்தின் ஒவ்வொரு அமைப்பிலும் தனது குணங்களை ஒன்றிணைக்கும். நிலப்பிரபுத்துவ சமூகத்தின் பின்புலமாகவும் கூட்டாளியாகவும் இருந்த கத்தோலிக்க மதநெறிகளுக்கு எதிராக, அரசியல் - பொருளாதார மாற்றத்திற்கு ஏற்ப உருவான ப்ரொடஸ்டண்ட் பிரிவு, முதலாளித்துவ அமைப்பின் தன்மைகளை உள்வாங்கியதை மாக்ஸ் வெப்பர், ‘The Protestant Ethic and the Spirit of Capitalism’ எனும் நூலில் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார். இப்படி அரசியல் - பொருளாதார மாற்றம் சமூகத்தின் அமைப்புக்களான மதம், குடும்பம், கல்வி, கலாச்சாரம் என எல்லாவற்றிலும் தனது இயல்பினை நிலையாகப் பதியச் செய்கிறது.
இந்தியாவின் அரசியல் - பொருளாதார மாற்றம்
சுதந்திரத்திற்குப்பின் இந்தியா பொருளாதார முன்னேற்றத்தைத் தூண்டும் வகையில் ‘Mixed Economy’ எனப்படும் பல்வகை பொருளாதார இயல்புகளை இணைத்த அரசியல் - பொருளாதார கொள்கையைப் பின்பற்றியது. இதன் அடிப்படையில், அரசு மற்றும் தனியார் முதலீட்டின் வாயிலாகப் பல்வேறு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு, பொருளாதார முன்னேற்றப் பாதையில் பயணித்தோம். இப்படிப்பட்ட அமைப்பில், அரசு முக்கிய பங்கு வகித்தாலும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அதன் முதலீட்டை மேம்படுத்தும் சிறப்பு அம்சங்கள் கொண்டதே இந்த அரசியல் பொருளாதாரம். தனியார் கைகள் வலுவடையவும், இந்தக் கொள்கையின் முரண்கள் மேலோங்க, உலகப்பொருளாதார நெருக்கடியின் பின்புலத்தில் இந்தியா புதிய தாராளமயக் கொள்கையை 1991இல் பின்பற்றத் தொடங்கியது.
புதிய தாராளமயவாதம் என்பது நடைமுறையில், Structural Adjustment Programme(SAP) எனப்படும் அரசியல் - பொருளாதாரக் கட்டமைப்பைச் சீரமைக்கும் செயல்திட்டமாகக் களமிறக்கப்படுகிறது. இந்தச் சீரமைக்கும் பணியின் முக்கிய நோக்கம் அரசின் பொது வருமானப் பற்றாக்குறையை (Fiscal Deficit) கட்டுப்படுத்துதல், மேலும் அதை முற்றிலும் போக்குவதே ஆகும். இதன் அடிப்படையில் அரசின் செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், சமூக மேம்பாட்டிற்கான செலவினம் குறிவைக்கப் படுகிறது. மேலும் இந்த மாற்றத்தினால் ஏற்படும் குறைபாடுகளுக்கு மருந்தாக தனியார்மயம் முன்னிறுத்தப்படுகிறது.
17ஆம் நூற்றாண்டில் உருவான தாராளவாதக் கொள்கைக்கும், 1970 முதல் உலகெங்கும் அமல்படுத்தப்பட்டு வரும் புதிய தாராளவாதக் கொள்கைக்குமான வேறுபாட்டை அறிவது முக்கியமாகும்.
பழைய தாராளவாதம் தனிமனிதனை அரசின் தலையீடு இன்றிச் செயல்படுவதற்கான முழுச்சுதந்திரத்தைப் பேணுகிறது. தனிமனிதத் திறனுக்கு அரசின் தலையீட்டை ஒரு தடையாகக் கருதும் இக்கொள்கை, அரசின் பங்கைத் தனிமனித முயற்சியிலிருந்து விலக்கி, அரசு செயல்பாட்டு எல்லையைச் சுருக்கி, தனிமனிதன் மற்றும் தனியாருக்கான எல்லையை விரிவுபடுத்துகிறது. ஆனால் புதிய தாராளவாதம் இதே கொள்கைகளை முன்னிறுத்தி அரசின் செயல்பாடு என்பது தனிமனித முயற்சியில் தலையீடு இல்லாமல் இருப்பது மட்டுமன்றி, எங்கெல்லாம் தனியாருக்கான சந்தை உருவாகவில்லையோ அங்கெல்லாம் தன் அதிகாரத்தைப் பயன்படுத்திச் சந்தை உருவாக்கத்திற்கான அடித்தளத்தை அரசே ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அரசின் செயல்ப்பாட்டைப் பழைய தாராளவாதத்தில் எதிர்மறையாகவும் புதிய தாராளவாதத்தில் ஆக்கபூர்வமாகவும் காண முடிகிறது.
இதன் வெளிப்பாடாகவே, கடந்த 20 ஆண்டுகளாக, இக்கொள்கையைப் பின்பற்றும் அனைத்து நாடுகளிலும், சமூக மேம்பாட்டிற்கான கல்வி, மருத்துவம் போன்றவற்றில் நிதி ஒதிக்கீடு குறைந்து வரும் போக்கைப் பார்க்க முடிகிறது. இதன் மூலம், மறைமுகமாகத் தனியாருக்கான சந்தையை அரசு உருவாக்கி வருவதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
தமிழகமும் புதிய பொருளாதாரமயமும்
இந்திய அரசியலில், மாநிலங்களுக்கு என தன்னிச்சையான அரசியல் - பொருளாதார நிலைப்பாடு என்பது கிடையாது. தமிழ்நாட்டிலும் நடுவண் அரசின் செயல்பாட்டிற்கு ஏற்ப திமுக, அதிமுக ஆட்சியில் புதிய தாராளவாதக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்காகப் பல இலவசத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் திராவிடக் கட்சிகள், மிகவும் தந்திரமாகத் தனியாருக்கான தனது சேவையைச் செய்து வருகிறது. இன்றைய தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் படிப்பது மற்றும் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்வது என்பதை மிகவும் தரம் தாழ்ந்த செயலாகக் கருதக்கூடிய பொதுக் கருத்தை உருவாக்கும், நடுவண் அரசின் செயலை மிகச் செம்மையாகத் திராவிடக் கட்சிகளும் ஆதரித்துச் செய்து வருகின்றன. இதன் வெளிப்பாடாக அரசுப் பள்ளிகளும் அரசு மருத்துவமனைகளும் இன்று பராமரிப்பு இன்றி, நிதிப் பற்றாக்குறை காரணமாக தரம் இழந்து, தனியாருக்கான பரப்பளவை விரிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் தனியாருக்கான இடப்பரப்பு, கடந்த 20 ஆண்டுகளாக விரிவடைந்து வருவதையும், அதற்கான அரசின் மறைமுகச் செயல்பாட்டையும் மிகத் தெளிவாகக் காணமுடிகிறது. 1990ஆம் ஆண்டிற்குப் பிறகு சமூக மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் அகில இந்திய அளவில் ஏற்பட்ட தொய்வைத் தமிழகத்திலும் காண முடிகிறது.
சமூக மேம்பாட்டிற்கான நிதிஒதுக்கீடு சதவிகிதம் (Social Sector Expenditure) (தமிழகம்)
வருடம் மொத்தப் பங்கீட்டில் சமூக மேம்பாட்டிற்கான ஒதுக்கீடு(%)
1990-91 45.1
1995-9641.1
2000-0139.4
2005-0636.9
2010-1140.2
2014-15 (BE)37.1
 ஆதாரம் : ரிசர்வ் வங்கி (2015; 124)
புதிய பொருளாதாரக் கொள்கையின் வாயிலாக ஏற் பட்டுள்ள சமூக ஏற்றதாழ்வு, வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற சமூகச் சீர்கேடுகளுடன், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் வீழ்ச்சி அடைந்துவரும் நிதிஒதுக்கீட்டின் போக்கு, வரும் காலங்களில் சமூக மேம்பாடு மற்றும் சமூக நீதிக்கான அரசியலில் மிகப்பெரும் சவாலாக இருக்கும். ரிசர்வ் வங்கியின் தற்போதைய புள்ளிவிவரம் மூலம் தமிழகத்தில் சமூக மேம்பாட்டிற்கான நிதிஒதுக்கீட்டின் விகிதம் கீழ்நோக்கிச் செல்லும் நிலையைக் காணமுடிகிறது. இதன் காரணமாகக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டிலும் அண்மைக் காலங்களில் ஏற்பட்டு வரும் மாற்றத்தைப் பார்க்க முடிகிறது.
மொத்தச் செலவில் கல்விக்கான செலவின் சதவிகிதம் (தமிழகம்)
வருடம்செலவு (%)
2000-0118
2005-0613.6
2010-1115.2
2014-15 (BE)14.2
ஆதாரம் : ரிசர்வ் வங்கி (2015; 118)
இது மறைமுகமாகத் தனியாருக்கான சந்தையைக் கல்வித் தளத்தில் ஊக்குவிப்பதாகும். இந்த நிதிக்குறைப்பின் விளைவாக தொடக்கக் கல்வியில் அரசாங்கப் பள்ளிகளின் விகிதம், மாணவர் சேர்க்கை விகிதம், ஆசிரியர் நியமனம் மற்றும் பள்ளி வசதிகளில், பெரும் சீர்குலைவு ஏற்பட்டு மக்கள் தாமாகவே தனியார்ப் பள்ளிகளை நோக்கிச் செல்லும் நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இப்படியாகப் புதிய தாராளமயவாத சாயற்கூறுகளை நாம் தமிழகத் தொடக்கக்கல்வியில் காணமுடிகிறது.
தொடக்கக் கல்வியில் தனியார் பள்ளிகள்
1990களுக்கு முன்பு தமிழகத்தில் தொடக்கக் கல்வியில் தனியார்ப் பள்ளிகள் மிகச்சிறிய அளவில் இருந்தன. சாதி - வர்க்க வேறுபாடுகள் இருந்தபோதிலும் அரசாங்கக் கல்விக்கூடங்கள் பெரும்பாலான மாணவர்களை ஒன்றிணைக்கும் மையப்புள்ளிகளாக இருந்தன. ஆனால் 1990களுக்குப் பிறகு சமூகத்தில் நிலவி வரும் சாதிய - வர்க்க வேறுபாடுகளை மிகத் தெளிவாக கல்விச்சாலைகள் பிரதிபலிக்கின்றன. இன்று அரசாங்கக் கல்விக்கூடங்கள் என்பன தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள அடித்தட்டு மக்களின் இடம் என்றே அறியப்படுகிறது. பல நேரங்களில் இவர்களும் இந்த கல்விச்சந்தையின் சூட்சமத்தில் சிக்கித் தமது வாழ்நிலை மேம்படும் என்ற நம்பிக்கையில் தனியார் கல்விச்சாலைகளை நோக்கிச் செல்கின்றனர்.
அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளின் சதவிகிதம் (தமிழகம்)
வருடம்அரசுப் பள்ளிகள் (%)தனியார்ப்பள்ளிகள் (%)
2002-0374.225.8
2003-0472.327.7
2004-0570.729.3
2005-0666.9633.04
2006-0767.0132.99
2007-0866.27 33.71
2008-0965.7534.25
2009-1065.4434.56
2010-1165.4734.53
2011-1265.634.4
2012-1365.334.7
2013-1465.1634.84
ஆதாரம்: NUEPA (2002-14)
தனிமனிதத்திறனை மேன்மேலும் செம்மைப்படுத்த சந்தை மிகப்பெரிய பங்கு வகிப்பதாக புதிய தாராளமய வாதம் வாதாடுகிறது. இதனால், மனித உழைப்பு மற்றும் திறனை வெளிக்கொணரும் அனைத்துத் தளங்களில் இருந்தும் அரசு விலகவேண்டும் என்கிறது. இந்த கொள்கை வெளிப்பாட்டைத் தமிழகத் தொடக்கப்பள்ளிகளில் காணமுடிகிறது. 2003இல் 74.2% இருந்த அரசுப்பள்ளிகள் 2014இல் 65.16% விகிதமாகக் குறைந்துள்ளன. இதே காலகட்டத்தில் தனியார்ப் பள்ளிகளின் வளர்ச்சி மிகுதி.
அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சதவிகிதம் (தமிழகம்)
வருடம்அரசுப் பள்ளிகள் (%)தனியார்ப்பள்ளிகள் (%)
2002-0360.339.7
2003-0457.542.5
2004-0550.0843.91
2005-0653.346.7
2006-075248
2007-0849.7850.22
2008-0946.6753.33
2009-1044.9455.06
2010-1143.6256.38
2011-1243.2356.77
2012-1340.4459.56
2013-1441.0658.94
ஆதாரம்: NUEPA (2002-14)
மாணவர் சேர்க்கை விகிதத்தைப் பார்க்கும்போது, அரசின் அரசியல் - பொருளாதார சூழ்ச்சியில் மக்கள் மூழ்கடிக்கப்பட்டு, தனியார்ப் பள்ளிகளில்தான் தரமான கல்வி கிடைக்கிறது என்ற முடிவுக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளது தெரிகிறது. நிதிப் பற்றாக்குறை மூலம் அரசுப்பள்ளிகளில் மாணவர்களைத் தக்கவைக்கப் போதுமான வசதிகள் செய்திடாமல் மறைமுகமாகத் தனியார்ப் பள்ளிகளுக்கான சந்தையை அரசு உருவாக்குகிறது. தனியார்ப் பள்ளிகளில் 2002இல் 39.7% விகிதமாக இருந்த மாணவர் சேர்க்கை இன்று 59% விகிதமாக ஏற்றம் அடைந்துள்ளது.
அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் ஆசிரியர் சதவிகிதம் மற்றும் ஒப்பந்த ஆசிரியர்களின் சதவிகிதம் (தமிழகம்)
வருடம்அரசுப் பள்ளிகள் (%)தனியார்ப்பள்ளிகள் (%)
 மொத்த ஆசிரியர்கள் (%)மொத்த அரசு ஆசிரியர்களில் ஒப்பந்த ஆசிரியர்கள் (%) 
2002-0357.120.7742.88
2003-0453.51.4146.5
2004-0552.71.5147.3
2005-0649.32.7950.7
2006-0749.52.1550.5
2007-0847.071.4152.99
2008-0945.761.2454.24
2009-1045.470.9754.53
2010-1145.194.2754.81
2011-1244.7816.4755.22
2012-1343.999.556.01
2013-1442.913.957.09
ஆதாரம்: NUEPA (2002-14)
அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியோடு அதன் ஆசிரியர் விழுக்காடும் குறைவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இதனிடையே ஒப்பந்த ஆசிரியர்களின் விகிதம் வலுவடைவது நிரந்தர ஆசிரியர் பணியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறி ஆக்குகிறது. எங்கெல்லாம் புதிய தாராளமயவாதம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் ஒப்பந்த ஆசிரியர் நியமனம் வலுவடைவது அரசின் பின்வாங்கலைத் தெளிவாக ஊர்ஜிதப்படுத்துகிறது. சமீப காலமாக ஒப்பந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்திருப்பதையும், ஏறியிறங்கு தன்மை கொண்டுள்ளதையும் பார்க்க முடிகிறது.
கல்வித்தளத்தில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த மாற்றத்தை நாம் புதிய தாராளமயவாத அரசியல் - பொருளாதாரக் கோட்பாட்டினிடையே ஆராயும்போது மாற்றத்திற்கான காரணங்களும் வருங்காலத் திசையும் நமக்குப் புலப்படுகின்றன. சாதி, மதம் மற்றும் வர்க்க வேறுபாட்டினுள் அடைந்து கிடக்கும் நமது சமூகத்தில் அரசின் பின்வாங்குதலும், தனியாரின் எழுச்சியும் மிகவும் அபாயகரமான சூழலை ஏற்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இடஒதுக்கீட்டிற்காகக் களமிறங்கும் பல முற்போக்கு குழுக்கள் தனியார்மயத்தின் மூலம் ஏற்படும் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்