மேட்டூர்: கோரிக்கை நிறைவேற்றக்கோரி அக்., 8 ம் தேதி தமிழகம் முழுவதும், 'ஜாக்டோ' சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
கடந்த, 2003ல் கோரிக்கை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்கள், ஜேக்டோ-ஜியோ என்ற கூட்டு கமிட்டி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக மாணவர்கள் படிப்பு பாதித்ததால், 1.5 லட்சம் ஆசிரியர்களை, அரசு கைது செயததுடன், 999 ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த போராட்டம் நடத்தி, 12 ஆண்டுக்கு பின் மீண்டும், கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தை சேர்ந்த, 32 ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து, 'ஜாக்டோ' (ஜாயின் ஆக்ஷன் கமிட்டி) என்ற கூட்டு குழுவை துவங்கினர். பின்னர், ஆறாவது ஊதிய குழு முரண்பாடுகளை களைய வேண்டும், ஆசிரியர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்பட, பல்வேறு கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, கடந்த சில மாதங்களாக, உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டம் என, அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு போராட்டங்களை நடத்தினர். எனினும், கோரிக்கை தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்காததால் அடுத்த கட்ட போராட்டத்துக்கு, 'ஜாக்டோ' தயாராகி வருகிறது.
இதுகுறித்து 'ஜாக்டோ' சேலம் மாவட்ட தொடர்பாளர் பாரி கூறியதாவது: ஜாக்டோ குழுவின் சேலம் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், 22 சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், கோரிக்கை நிறைவேற்றக்கோரி, மாநிலம் முழுவதும் அக்., 8ம் தேதி, ஆசிரியர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:
கருத்துரையிடுக