தஞ்சாவூர்
அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழாசிரியர் கழக மாநில செயற்குழு வலியுறுத்தி உள்ளது.
செயற்குழு கூட்டம்
தமிழக தமிழாசிரியர் கழக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மருதவாணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நாகேந்திரன், மாநில சிறப்பு தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்ட தலைவர் கலியமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் மாநில பொருளாளர் கோவிந்தன் அறிக்கை வசித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
தாய்மொழி தமிழ்பாடத்தை முறைப்படி முதல்பாடமாக வைத்து அரசாணையை திருத்தம் செய்ய வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துடன் உள்ள அகவிலைப்படி 100 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளதால் அகவிலைப்படியில் 50 சதவீத விழுக்காட்டினை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து ஊதியமாக வழங்க வேண்டும். ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் 6 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியதைப்போல தமிழக அரசும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்.
பணியிடை பயிற்சி
நடப்பு கல்வி ஆண்டில் பட்டதாரி ஆசிரியர் தவிர அனைவருக்கும் பொது மாறுதல் வழங்கிய தமிழக அரசுக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்வது. அதே நேரத்தில் பொதுமாறுதல் வழங்காமல் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணி தொகுப்பிற்கு உடனடியாக பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த தமிழக அரசையும், பள்ளிக்கல்வித்துறையையும் கேட்டுக்கொள்வது. தமிழ்பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பணியிடை பயிற்சி அளிக்க வேண்டும். அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களும் உடனடியாக பட்டதாரி ஆசிரியர் தொகுப்பில் இருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில தேர்வு செயலாளர் சரவணபவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட செயலாளர் முத்தழகன், ஒருங்கிணைப்பாளர் தாமரைச்செல்வன் மற்றும் மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர். முடிவில் இணை செயலாளர் ராசா.ஆனந்தன் நன்றி கூறினார்.

0 comments:
கருத்துரையிடுக