வியாழன், 3 செப்டம்பர், 2015

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மகிழ்ச்சி

சேலம்: வரும், செப்டம்பர், 5ம் தேதி, நாடு முழுவதும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், டெல்லியில் மத்திய அரசின் சார்பில், நடக்கும் விழாவில், நாடு முழுவதும் இருந்து, சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் தமிழகத்தில், சேலம்.கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் உட்பட, 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

அவர்கள் விபரம்:

தனராஜ்: நடப்பு கல்வியாண்டில், சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகாவில் உள்ள பொன்னாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தனராஜ், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி புஷ்பா தமிழாசிரியையாக பணிபுரிகிறார். இவருக்கு பிரியங்கா என்ற மகளும், கார்த்திக் என்ற மகனும் உள்ளனர். இவர், கடந்த, 1985ல், இடைநிலை ஆசிரியராக பணியை துவக்கி, சூளகிரி, செட்டிப்பட்டி பள்ளிகளில் ஆசிரியராகவும், எலையம்பாளையம், செட்டிப்பட்டி துவக்கப்பள்ளிகளில், தலைமை ஆசிரியராகவும், தற்போது பொன்னாம்பாளையம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். இவரது ஆசிரியர் பணியை பாராட்டி, கடந்த, 2009ல், மாநில அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

தற்போது, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து தனராஜ் கூறியதாவது: செட்டிப்பட்டி கிராமம் தான் என் சொந்த ஊர். அதன் அருகில் உள்ள மோட்டூர் உள்ளிட்ட கிராமங்களில், பள்ளி இல்லாமல், பல குழந்தைகள் பள்ளிக்கு செல்லாத நிலை இருந்தது. கிராம பெரியவர்களின் ஒத்துழைப்புடன், அங்கு புதிய பள்ளிகள் அமைக்க ஏற்பாடு செய்ததே, என் ஆசிரியர் பணியில் நிறைவு தரும் செயலாக கருதுகிறேன். பள்ளிக்கு வரும் ஏழை, எளிய குழந்தைகளுக்கு, தரமான கல்வியை தர வேண்டும் என்பதே, அரசு பள்ளி ஆசிரியர்களின் எண்ணமாக இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

பழனியப்பன்: கரூர், வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பழனியப்பன், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், கரூர் மாவட்டம், வாங்கல் அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர். மனைவி ஜோதிமணி. மகன் நவீன்ராஜ், திருச்சி ஜோசப் கல்லூரியிலும், மகள் நந்தினி, கோவையில் உள்ள கல்லூரியிலும் படிக்கின்றனர். கடந்த, 2011ல் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற அவர், தற்போது தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து, பழனியப்பன் கூறியதாவது: கடந்த, 1988ம் ஆண்டில், சேரன் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தேன். தொடர்ந்து, 1994ம் ஆண்டு பள்ளி முதல்வராக பொறுப்பேற்றேன். சிறந்த சேவை காரணமாக, கடந்த, 2011 ல், மாநில அளவிலான நல்லாசிரியர் விருது கிடைத்தது. மாநில நல்லாசிரியர் விருது கிடைத்து, இரண்டு ஆண்டு கழித்த பின், தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும். கடந்தாண்டு தேசிய விருதுக்கு விண்ணப்பித்தேன். தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விருது கிடைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

விஜயலலிதா: கரூர், காந்திகிராமத்தை சேர்ந்தவர் விஜயலலிதா. தான்தோன்றிமலை யூனியனுக்குட்பட்ட நரிகட்டியூர் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த, 1990ம் ஆண்டு பிப்ரவரி, 26ம் தேதி, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டாரத்துக்குப்பட்ட ஏ. வெங்கடாபுரம் அரசு பள்ளியில், ஆசிரியராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து, தான்தோனி வட்டாரத்துக்குட்பட்ட ரோட்டுகடை துவக்கப்பள்ளியில், 10 ஆண்டு காலம் பணியாற்றினார். கடந்த, 2001ல் வெள்ளியணை கே.பி., தாழைப்பட்டி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்றார். ஓராண்டுக்கு பின், 2002ல் நரிகட்டியூர் துவக்கபள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த, 2011ல் மாநில நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.

தற்போது, தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து விஜயலலிதா கூறியதாவது: கடந்த, 2002ம் ஆண்டு முதல், நரிகட்டியூர் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியில் பணியாற்றுகிறேன். பள்ளியில், பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதால், மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. பல்வேறு வசதிகளை மேம்படுத்தியதற்காக, கடந்த, 2011ல் எனக்கு மாநில நல்லாசிரியர் விருது கிடைத்தது. தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பம் செய்திருந்தேன். விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது.கடின உழைப்புக்கு கிடைத்த விருதாக இதை நினைக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்