திருப்பூர் : தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர் களுக்கு, பஸ், ரயில்களில் கட்டண சலுகை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நினைவாக, ஆண்டுதோறும் செப்., 5ல், ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்நாளில்,
சிறப்பாக கல்வி சேவை புரிந்த ஆசிரியர்களுக்கு, "நல்லாசிரியர்' விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், தமிழக அரசு சார்பில், 377 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. வெள்ளி பதக்கம், சான்று மற்றும் விருது ஊக்கத்தொகையாக, ஐந்தாயிரம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. போக்குவரத்து செலவாக, ரயில் கட்டண செலவும் வழங்கப்படுகிறது.
இவ்விருது பெறுவதற்கு, ஆசிரியர் எனில், 15 ஆண்டுகள்; தலைமை ஆசிரியர் எனில், 20 ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும்; 1998ல் விருது ஊக்கத்தொகை, இரண்டாயிரம் ரூபாயாக இருந்த நிலையில், 2007ல் ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. எட்டு ஆண்டுகளாகியும், இத்தொகை உயர்த்தப்படவில்லை. மத்திய அரசால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கான பட்டியல், 20 நாட்களுக்கு முன்பே, அறிவிக்கப்படுகிறது; ஆனால், மாநில அரசு விருது பெறுவோர் பட்டியில், ஓரிரு நாட்களுக்கு முன்பே வெளியாகிறது. இதனால், பஸ் மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்ய முடியாமல், ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, விருது தொகையை, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவதுடன், விருது பெறுவோர் விவரங்களை, முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்பது, ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும், மாணவ சமுதாயத்தை நல்வழிப்படுத்தியதற்காக, நல்லாசிரியர் விருது பெறுவோருக்கு, பஸ் மற்றும் ரயில்களில் பயண கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என்பதும், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

0 comments:
கருத்துரையிடுக