தேனியில் அரசு தொடக்கப் பள்ளிகளில் கலந்தாய்வு முடிவடைந்த பின்னர், முறைகேடாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு உத்தரவை திரும்பப் பெறக் கோரி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வியாழக்கிழமை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
இது குறித்து, மாவட்டத் தலைவர் வே. பழனிராஜ், செயலர் எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டாகக் கூறியது: ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. கலந்தாய்வுக்குப் பின்னர், அகமலை தொடக்கப் பள்ளியில் இருந்து சிலைமலை பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரை, தாடிச்சேரிக்கு முறைகேடாக இடம் மாற்றம் செய்து, மாவட்டத் தொடக்கக் கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், கோவில்பாறை பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு முறையற்ற பதவி உயர்வு அளித்தும், சிங்கராஜபுரம் பள்ளியில் இருந்து கணேசபுரம் பள்ளிக்கு மனம் ஒத்த பணியிட மாறுதலில் சென்றவரை மீண்டும் பணியிட மாற்றம் செய்தும், கெங்குவார்பட்டி பள்ளியில் இருந்து நாகலாபுரம் பள்ளிக்கு ஒருவரை பணியிட மாற்றம் செய்தும், மாவட்ட தொடக்கக் கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. எனவே, கலந்தாய்வு முடிவடைந்த பின்பு, முறைகேடாக வழங்கப்பட்டுள்ள இந்த பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு உத்தரவுகளை ரத்து செய்யவேண்டும் என்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்தை நடத்த அதிகாரிகள் முன் வராத நிலையில், ஆசிரியர்களின் முற்றுகைப் போராட்டம் இரவு 8 மணிக்கு மேலும் நீடித்தது.

0 comments:
கருத்துரையிடுக