ஊராட்சி மன்றத் தலைவரிடம் அவதூறாக நடந்ததாக பள்ளித் தலைமை ஆசிரியரைக் கண்டித்து, கிராம மக்கள் பள்ளியை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குள்பட்ட ராமநாயக்கன்பேட்டை ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜோலார்பேட்டையைச் சேர்ந்த சம்பூர்ணசகாயமும், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக ராமநாயக்கன்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.ஆர்.வாசு, கல்விக் குழுத் தலைவராக சம்பத்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனர்.
இந்த நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி வழங்கும் விழா சனிக்கிழமை காலை நடைபெறுவதாக நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டு, அதற்கான விழா ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது. விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி, எம்எல்ஏ கோவி.சம்பத்குமார், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளதால் விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
இதில் பள்ளித் தலைமையாசிரியர் சம்பூர்ணசகாயம், ஆர்.ஆர்.வாசு, நிர்வாகிகள் தலைமையாசிரியர் அறையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தலைமை ஆசிரியருக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே விழா நடத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த தலைமையாசிரியர், ஊராட்சித் தலைவரை அவதூறாகப் பேசி, தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர், அந்தப் பகுதி மக்கள் தலைமை ஆசிரியரைக் கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும் இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணி செய்யக் கூடாது என்று பள்ளி மைதானத்தில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வாணியம்பாடி காவல் ஆய்வாளர் பழனி, போலீஸார் பள்ளிக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தலைமை ஆசிரியரை மீட்டு அம்பலூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதையறிந்த கிராம மக்கள் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளிக்கு வெளியே சென்று தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடி டிஎஸ்பி வனிதா, வாணியம்பாடி வட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோர் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடமும், தலைமை ஆசிரியர் சம்பூர்ணசகாயத்திடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், அம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மேலும் பள்ளியில் டிஎஸ்பி வனிதா தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments:
கருத்துரையிடுக