விருதுநகர்:புதிய ரேஷன்கார்டு வழங்குவதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் துவங்காததால் பழைய கார்டிலேயே மீண்டும் உள்தாள் இணைத்து அதன் பயன்பாட்டுக்காலம் நீட்டிக்கப்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 2005ல் புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. அதன் பயன்பாட்டுக்காலம் 2009ல் முடிந்தது. அதன்பின் ஆண்டுதோறும் உள்தாள் இணைக்கப்பட்டு நீட்டிப்பு செய்யப்படுகிறது.
தற்போதுள்ளபடி இந்தாண்டு டிச.,31ம் தேதியோடு உள்தாள் முடிகிறது. ஆனால் அதற்குப்பின் புதிய ரேஷன் கார்டு வழங்குவதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை.
வழங்கல்துறை அதிகாரிகள் கூறியதாவது;குடும்பத்தலைவர், உறுப்பினர்களின் கைவிரல்ரேகை, கண்விழித்திரை உள்ளிட்ட ஆதார் அட்டைக்கு எடுக்கப்பட்ட விபரங்களை பயன்படுத்தி கையடக்க 'ஸ்மார்ட் கார்டு' போல ரேஷன் கார்டு வழங்கப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டது.
தற்போதுள்ள ரேஷன் கார்டுகள் பெரும்பாலும் சேதமடைந்துள்ளன. அதற்குப்பதிலாக விரைவில் புதிய கார்டு வழங்க வேண்டும் என கலெக்டர்கள் மூலம் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.ஆனால் அதற்கான எந்தப்பணிகளும் இதுவரை துவங்கப்படவில்லை.
சட்டசபை தேர்தலை கருத்திற்கொண்டு மீண்டும் உள்தாள் இணைத்து தரப்பட்டு ஓராண்டிற்கு தற்போதுள்ள ரேஷன் கார்டு காலநீட்டிப்பு செய்யப்படலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் புதிய ரேஷன் கார்டு வழங்குவது தொடர்பாக அரசுதான் அறிவிக்க வேண்டும்,' என்றனர்.

0 comments:
கருத்துரையிடுக