போளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலாண்டுத் தேர்வு முடிந்தும் தலைமை ஆசிரியர் நியமிக்கப்படாமல் உள்ளதாக, பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
போளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பவள விழா கண்ட பள்ளியாகும். இந்தப் பள்ளி 1992-ஆம் ஆண்டு முதல் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளியாகச் செயல்படுகிறது.
இங்கு நாயுடுமங்கலம், கலசப்பாக்கம், படியம்பட்டு, திருசூர், குருவிமலை, பெரியகரம், பூங்கொல்லை மேடு, சேத்துப்பட்டு ஒன்றியத்தைச் சேர்ந்த சனிக்கவாடி, பெலாசூர் உள்ளிட்ட 100-க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகள் தமிழ் வழி, ஆங்கில வழிகளில் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி மாணவிகள் 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகளில், மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இங்கு 23 ஆசிரியர்களும், 37 ஆசிரியைகளும் பணி புரிந்து வருகின்றனர். 5 ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது.
இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த சுப்பிரமணியன் 31.3.2015 அன்று பணி நிறைவு பெற்றார். அதன் பின்னர் பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் பள்ளியின் நிர்வாகத்தைக் கவனித்து வந்தனர்.
தற்போது பள்ளிக்குத் தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும். ஆனால் இதுவரை நியமிக்கப்படவில்லை. மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு முடிந்தும் தலைமை ஆசிரியர் இல்லை என பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். இது மகளிர் பள்ளி என்பதால் பெண் தலைமை ஆசிரியரையே நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. கடந்த ஜூலை மாதம் இந்தப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறி பொதுமக்களும் பெற்றோரும் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியது குறிப்பிடத் தக்கது.
மாவட்டக் கல்வித் துறை சார்ந்த கூட்டங்கள் இந்தப் பள்ளியில் அடிக்கடி நடத்தப்படுகின்றன. அதற்கு இந்தப் பள்ளி தலைமை ஆசிரியரே செலவு செய்ய நேரிடுகிறது என்று கூறப்படுகிறது. மேலும் போளூர் பகுதியைச் சேர்ந்த சில பிரமுகர்கள் பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சிகளை பள்ளி வளாகத்தில் நடத்த அனுமதி கேட்டு தொந்தரவு கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் தலைமை ஆசிரியர் பணிக்கு வர ஆசிரியர்கள் தயங்குகின்றனர் என்று தெரிகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, தலைமை ஆசிரியரை பள்ளிக்கு நியமிக்க வேண்டும் என பெற்றோர், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

0 comments:
கருத்துரையிடுக