
புதிய தேர்வு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுதில்லியில் நடந்த போராட்டம்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற 27 வகையான இந்திய குடிமைப் பணித்தேர்வுகளுக்கு ஆட்களைத் தேர்வுசெய்யும் யுபிஎஸ்சி தேர்வுகளில் முதல் நிலைத் தேர்வில் புதிய முறை அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
2010ஆம் ஆண்டுவரை யுபிஎஸ்சி தேர்வுகளில் முதல் தாள், பொது அறிவைச் சோதிக்கும் வகையிலும் இரண்டாம் தாள் விருப்பப் பாடமாகவும் இருந்துவந்தது. ஆனால், 2010ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய முறையின்படி, இரண்டாவது தாளில் “ஆப்டிடியூட்” எனப்படும் திறனறித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முறையினால், நகர்ப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே அதிக வாய்ப்புகள் கிடைப்பதாகக்கூறி நாடு முழுவதும் மாணவர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்புத்தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, தில்லியின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். திங்கட்கிழமையன்று யுபிஎஸ்சி பவன் முன்பாக திரண்ட மாணவர்கள் அனுமதிச் சீட்டுகளை எரித்துப் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் எதிர்ப்பு
வட இந்தியாவில் இது தொடர்பான போராட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தமிழகத்திலும் மாணவர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தத் தேர்வுகளில் ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே கேள்விகள் இடம்பெறும் நிலையில், இது இந்தி பேசாத தென்னிந்திய, வடகிழக்கு மாநில மாணவர்களும் பெரும் பாதகமாக இருக்கிறது என்பது இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் கருத்தாக இருக்கிறது.
இந்தப் பிரச்சனையில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டுத் தீர்க்க வேண்டுமென தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னதாக கோரியிருந்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக விடுத்திருக்கும் அறிக்கையில், யுபிஎஸ்சி வினாத்தாள் இந்தியாவின் அதிகாரபூர்வமான 22 மொழிகளிலும் இருக்க வேண்டுமெனக் கோரியுள்ளார். திறனறித் தேர்வை ரத்துசெய்துவிட்டு, முன்பைப் போல விருப்பப்பாடத்தைக் கொண்டுவர வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இந்தியக் குடிமைப் பணித் தேர்வுகளுக்கு தயார் செய்துவரும் மாணவர்களைப் பொறுத்தவரை, புரிந்துகொள்ளும் திறனைச் சோதிப்பதற்குப் பதிலாக, ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளும் திறனைச் சோதிப்பதாக இவை இருக்கின்றன என்கிறார்கள்.
ஆனால், சில மாணவர்கள் இந்த முறை சரிதான் என்கிறார்கள். குடிமைப் பணிக்குத் தேர்வாகிறவர்களுக்கு குறைந்த அளவாவது ஆங்கிலம் தெரிந்திருப்பதை இது உறுதி செய்கிறது என்கிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து, சென்னையில் இயங்கிவரும் குடிமைப் பணி தேர்வு மையமான சங்கர் ஐஏஎஸ் அகாதமியின் இயக்குனர் ஷங்கரிடம் கேட்டபோது, திறனறித் தேர்வுகள் அவசியமானவை என்றாலும் அதில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் கிடைத்தால் போதும் என்ற முறை வரவேண்டும் என்று குறிப்பிட்டார்.
தற்போதைய முறையில், ஐஐடி நுழைவுத் தேர்வு போன்ற திறனறி தேர்வுகளுக்கு தயார் செய்துவரும் மாணவர்கள் எளிதில் தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களும், வரலாறு, மொழி போன்ற கலையியல் படிப்புகளைப் படிப்பவர்களும் பின்தங்குகிறார்கள் என்கிறார் ஷங்கர்.
2011ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்விலேயே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், இந்த ஆண்டுதான் இந்தத் தேர்வு முறைக்கு இந்தியாவில் பெரும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ஆகஸ்ட் 24ஆம் தேதி யுபிஎஸ்சி முதற்கட்டத் தேர்வு நடக்கவிருக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று உயர் நிலை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார். இந்தத் தேர்வு முறையில் மாற்றம் இருக்குமா என்பது குறித்து விரைவிலேயே அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
கருத்துரையிடுக