அருப்புக்கோட்டை அருகே அரசு பள்ளியில் 2 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். மாணவர்கள் வருகை குறைந்ததால் மூடுவிழாவை நோக்கி பள்ளி செல்கிறது. விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை உதவி தொடக்கக் கல்வி அலுவலக கட்டுப்பாட்டில் 85 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அருப்புக்கோட்டை அருகே சேது ராஜபுரத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் போதுமான குடிநீர், கட்டிடம், கழிப்பறை வசதி உட்பட பல்வேறு வசதிகள் உள்ளன.
மாணவர்களுக்கு பாடப் புத்தகம், சீருடை, புத்தக பை, கணித உபகரணம் என இலவசமாக வழங்கப்படுகிறது. இருப்பினும், மாணவர்களை சேர்க்க பெற்றோர் தயங்கி வருகின்றனர். கிராமப்புறங்களில் இருந்து நகரில் உள்ள தனியார் கான்வென்ட் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளையே தேடி செல்கின்றனர். இந்த பள்ளியில் தற்போது 2 மாணவர் மட்டுமே படிக்கின்றனர். மாணவர் ஜெயக்குமார் 5ம் வகுப்பும், மாணவி பிரியதர்ஷினி 4ம் வகுப்பும் படிக்கின்றனர்.
இவர்களுக்கு பாடம் கற்பிக்க இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளியில் அனைத்து வசதிகள் இருந்தும் மாணவர் சேர்க்கை இல்லை. இந்த பள்ளியின் நிலை இப்படியிருக்க அருகில் உள்ள ராமசந்திராபுரத்தில் தலைமையாசிரியர் மட்டும் உள்ளார். மாணவ, மாணவிகள் இல்லை. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அருகில் உள்ள பள்ளிகளோடு இணைக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘சேது ராஜபுரத்தில் உள்ள பள்ளி 60 ஆண்டு பழமை வாய்ந்தது. இந்த பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை போன்று தற்போது 2 பேர் மட்டுமே படித்து வருகின்றனர். தனியார் பள்ளிகளிலேயே அதிகம் விரும்பிச் சேர்க்கின்றனர். ஆசிரியர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆர்வம் இருந்தும் படிக்க மாணவர்கள் இல்லை. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி பள்ளிகள் மூடப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
0 comments:
கருத்துரையிடுக